தமிழகத்தின் நகராட்சி துறை அமைச்சர் கே.என் நேரு, பாஜகவின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா என்று கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பீகாரில் எஸ்ஐஆர் என்ற பெயரில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதும் அதில் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியல் சமூகத்தினர் குறிவைக்கப்பட்டதும் மிகப்பெரிய மோசடி. மோடி அரசு அமைந்த பிறகு தன்னாட்சி அதிகாரங்கள் கொண்ட சிபிஐ, ஆர்பிஐ, சிஏஜி, என். ஐ. ஏ , வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறியது.
இந்த வரிசையில் தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசின் கண் அசைவுக்கு ஏற்ப தற்போது நடக்க தொடங்கியுள்ளது. மத்திய பாஜக அரசு தமிழகத்திலும் இதே திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்தால் அதற்கு எதிராக தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். தேர்தல் ஆணையம் வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு நடத்தப்படும் என தெளிவாக கூறியிருந்த நிலையிலும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுடைய வீடுகளுக்கு வரவே இல்லை என வாக்காளர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் தேர்தல் ஆணையம் தனது நடுநிலையை இழந்து ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. ஜனநாயகத்தின் ஆணிவேரான தேர்தல் முறையை பாஜக தில்லுமுல்லாக கையாண்டால் தமிழ்நாடு அமைதியாக இருக்காது என்று கே.என் நேரு எச்சரித்துள்ளார்.
