ராஜஸ்தான் மாநில பாஜகவின் முக்கிய முகமும், முன்னாள் அமைச்சருமான ஹேம் சிங் பதானா (55), புற்றுநோய் பாதிப்பால் இன்று காலமானார். கடந்த ஐந்து மாதங்களாகப் புற்றுநோயுடன் போராடி வந்த அவர், தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. ராஜஸ்தான் அரசியலில் செல்வாக்கு மிக்க குர்ஜார் சமூகத்தின் முகமாகத் திகழ்ந்த இவரது மறைவு, அம்மாநில பாஜகவிற்கும் அந்தச் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் ஹேம் சிங் பதானா. அவரது அரசியல் அனுபவமும், சமூக ரீதியான செல்வாக்கும் ராஜஸ்தான் பாஜகவின் வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்தன. இவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ள அம்மாநில முதல்வர், வசுந்தரா ராஜே உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
