தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அரசியல் மற்றும் சினிமா என இருமுனைகளிலும் தற்போது கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார். குறிப்பாக, கரூர் உயிரிழப்பு வழக்கில் சிபிஐ விசாரணைக்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டது மற்றும் ஜனவரி 19-ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது விஜய்க்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. தை மாதம் முதல் தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்தத் தொடர் சட்டச் சிக்கல்கள் அவரது அரசியல் நகர்வுகளை முடக்கியுள்ளன.
அரசியல் களத்தில் ஆளும் திமுக அரசு ஒருபுறம் தவெக நிர்வாகிகள் மீது வழக்குகள் மற்றும் கூட்டங்களுக்குத் தடை என இறுக்கமான பிடியைக் கையாண்டு வரும் சூழலில், மத்திய பாஜக அரசும் விஜய்க்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. விஜயை ஒரு தனி சக்தியாக வளரவிட்டால் அது திமுக கூட்டணிக்கே சாதகமாகும் எனக் கருதும் பாஜக, அவரை முடக்கப் பார்ப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும், எதிர்பார்த்தபடி வலுவான கூட்டணிக் கட்சிகள் இணையாதது விஜய்க்குப் கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாத் துறையிலும் விஜய்க்குச் சோதனைகள் தொடர்கின்றன. அவரது கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தணிக்கைத் துறை மற்றும் நீதிமன்றச் சிக்கல்களால் அதன் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. இது பாஜகவின் மறைமுக அழுத்தம் என தவெக தரப்பினர் சந்தேகிக்கும் நிலையில், சினிமா மற்றும் அரசியல் என அனைத்துப் பக்கங்களிலிருந்தும் சூழ்ந்துள்ள இந்தத் தடைகளை விஜய் எவ்வாறு முறியடிக்கப் போகிறார் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
