“காங்கிரஸை விட அதிகமா? அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக”…. எடப்பாடிக்கு டெல்லி கொடுக்கும் ’30’ தொகுதிகள் பிரஷர்….!

By Nanthini on பங்குனி 8, 2026

Spread the love

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, தொகுதிப் பங்கீடு தொடர்பாக தீவிர ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் பாஜக, அதைக் காட்டிலும் கூடுதலாக, குறைந்தபட்சம் 30 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. காங்கிரஸை விடக் குறைவான தொகுதிகளில் போட்டியிடுவது கட்சிக்கு அரசியல் ரீதியாகப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அக்கட்சியின் தலைவர்கள் கருதுகின்றனர்.

சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பாஜகவின் ஆலோசனைக் கூட்டத்தில், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் பங்கேற்று தமிழகத் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதித்தார். குறிப்பாக, திமுகவின் வாக்கு வங்கியாகக் கருதப்படும் மொழி சிறுபான்மையினரின் வாக்குகளை, குறிப்பாக தெலுங்கு மொழி பேசும் மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கான திட்டங்கள் குறித்து அவர் முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். ஏப்ரல் 15 வரை முழு கவனத்தையும் தேர்தல் பணிகளில் மட்டுமே செலுத்த வேண்டும் என அவர் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

   

மேலும், கூட்டணி ஆட்சி அல்லது தலைமை குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பி.எல். சந்தோஷ் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அதிமுக மற்றும் பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பான எந்த முடிவும் தேசிய தலைமையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும், மாநிலத் தலைவர்கள் இது குறித்துத் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

   

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொகுதிப் பங்கீடு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தாலும், பாஜகவின் இந்த 30 தொகுதிகள் கோரிக்கை அதிமுக தலைமைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி இந்த கோரிக்கையை ஏற்பாரா அல்லது தொகுதிப் பங்கீட்டில் இழுபறி தொடருமா என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.