தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் பாஜக சந்தித்த படுதோல்வி, அக்கட்சிக்குள் மிகப்பெரிய உள்கட்சி மோதலை உருவாக்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, உதகை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. குறிப்பாக, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 11 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெறும் 3 சதவீத வாக்குகளாக சரிந்திருப்பதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
மாநிலத் தலைமைக்கு எதிராக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளனர். நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக, அதிமுகவின் ஒரு துணை அமைப்பைப் போலச் செயல்பட்டதாகவும், அண்ணாமலை உருவாக்கி வைத்திருந்த தனித்துவமான அடையாளத்தை கட்சி இழந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. “சாணக்கியர் சறுக்கினாரோ?” என்ற பெயரில் வெளியான அறிக்கை மற்றும் மூத்த தலைவர்கள் பதவி விலகியதாகப் பரவிய போலி கடிதங்கள் என தமிழக பாஜகவின் உட்கட்சிப் பூசல் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தெருச்சண்டையாக மாறியுள்ளது.
இந்த அதிருப்தியின் உச்சகட்டமாக, மாநிலத் தலைமையை விமர்சித்த கன்னியாகுமரி மாவட்டத் துணைத் தலைவர் உள்ளிட்ட 8 நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகப் பேசிய செய்தித் தொடர்பாளர் பிரசாத் நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலைக்கு எதிரான நிலைப்பாட்டில் சில மூத்த தலைவர்கள் ஒன்று சேர்ந்ததால், அடிமட்டத் தொண்டர்கள் புறக்கணிக்கப்பட்டதே இந்தச் சரிவுக்குக் காரணம் எனத் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
மறுபுறம், அண்ணாமலை இந்தத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து நயினார் ஆதரவாளர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கோவையில் வாய்ப்பு கிடைக்காததால் அவர் ஒதுங்கிக் கொண்டதாகவும், “விஜய் அலை” குறித்த பயத்தினால் அண்ணாமலை தேர்தலைத் தவிர்த்தார் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இத்தகைய பரஸ்பர குற்றச்சாட்டுகளால் தமிழக பாஜக இரண்டாகப் பிளவுபடும் சூழல் உருவாகியுள்ள நிலையில், டெல்லி மேலிடம் தலையிட்டு தலைமை மாற்றத்தை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
