“சாமி சத்தியமா சொல்லுங்க கட்சிக்கு துரோகம் பண்ணலனு…” – MLAக்களிடம் கோவிலில் சத்தியம் வாங்கும் பாஜக… கர்நாடகாவில் உச்சக்கட்ட பரபரப்பு…!!

By Swetha on ஆனி 22, 2026

Spread the love

கர்நாடகாவில் கடந்த ஜூன் 18, 2026 அன்று நடைபெற்ற சட்டசபை மேலவை உறுப்பினர் தேர்தலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணியான பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி ஆளும் காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர். இதனால், கூடுதல் பலத்துடன் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 5 இடங்களிலும் எதிர்பாராதவிதமாக வெற்றி பெற்றது; அதே சமயம் வெறும் 14 வாக்குகளை மட்டுமே பெற்ற ஜே.டி.எஸ் வேட்பாளர் கோவிந்தராஜு தோல்வியடைந்தார். இந்த திடீர் குறுக்கு வாக்குப்பதிவு எதிர்க்கட்சி கூட்டணியினரிடையே பெரும் அதிர்ச்சியையும், அரசியல் வட்டாரத்தில் பிளவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட பாஜக மேலிடத் தலைவர் நிதின் நபின், இது குறித்து விளக்கம் அளிப்பதற்காக கர்நாடக மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா மற்றும் மாநிலப் பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வால் ஆகியோரை ஜூன் 23 அன்று டெல்லிக்கு அழைத்துள்ளார். மேலும், கட்சியின் உத்தரவை மீறி எம்.எல்.ஏக்கள் ஏன் இவ்வாறு வாக்களித்தனர் என்பதைக் கண்டறிய 3 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஜூன் 25ஆம் தேதிக்குள் தனது விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

   

இருப்பினும், இது ஒரு ரகசிய வாக்கெடுப்பு என்பதால் விசாரணைக் குழுவால் துரோகம் செய்தவர்களைக் கண்டுபிடிப்பது கடினம் என உணர்ந்த பாஜக, இதற்கு ஒரு ‘தெய்வீகத் தீர்வை’ கையில் எடுத்துள்ளது. இதன்படி, பிரசித்தி பெற்ற தர்மஸ்தலா ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் கோவிலில் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தை நடத்த மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா திட்டமிட்டுள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து எம்.எல்.ஏக்களிடமும், “நான் கட்சிக்கு துரோகம் செய்யவில்லை, பாஜகவிற்குத்தான் வாக்களித்தேன்” என்று மூலவர் மஞ்சுநாதப் பெருமான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் வாங்கப்பட உள்ளது. உண்மையைக் காக்கும் மஞ்சுநாதர் கோவிலில் பொய் சொல்லி யாரும் தப்ப முடியாது என்ற பரவலான நம்பிக்கையுள்ளதால், உண்மையை அறிய எஞ்சியுள்ள ஒரே வழி இதுதான் என பாஜக முடிவு செய்துள்ளது.