அண்ணாமலை தொடங்கிய ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் இணைந்த பாஜக முன்னாள் நிர்வாகிகள் பலருக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் வழங்கப்படாததால் அங்கு புகைச்சல் கிளம்பியுள்ள நிலையில், அந்த அதிருப்தியாளர்களை மீண்டும் தன்வசப்படுத்த பா.ஜ.க தீவிர வலை வீசி வருகிறது. “மீண்டும் தாய்க்கட்சிக்குத் திரும்பினால் ஏற்கனவே வகித்த அதே பழைய பதவிகளே வழங்கப்படும்” என பா.ஜ.க தரப்பில் தூண்டில் போடப்பட்டு ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வரும் தகவல் தமிழக அரசியலில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
ஆரம்பத்தில் அண்ணாமலையின் புதிய தொடக்கத்தை நம்பி பா.ஜ.க-விலிருந்து கொத்துக் கொத்தாக விலகிச் சென்ற நிர்வாகிகள், தற்போது பதவியும் இன்றி அங்கீகாரமும் இன்றி தவிப்பதால், பா.ஜ.க-வின் இந்த ஆஃபரை ஏற்று மீண்டும் தாய்வீடு திரும்புவார்களா அல்லது ‘மீண்டும் மீண்டுமா?’ எனத் தயங்கி ஒதுங்குவார்களா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
