“அவனை புடிச்சி ஜெயில போடுங்க CM சார்”…. மார்க்கண்டேயன் கைதை கொண்டாடும் பாஜக… நாராயணன் திருப்பதி பரபரப்பு பேட்டி….!

By Nanthini on ஆடி 21, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசுகையில், தமிழக முதல்வர் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்திற்குள் விஜய் வந்தால் எலும்பை உடைப்போம் என்பது போன்ற அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை இன்று காலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனிடம் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் மேஜிஸ்ட்ரேட் சுமதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன் மற்றும் மார்க்கண்டேயன் தரப்பு வழக்கறிஞர்கள் அலெக்சாண்டர், பாபு செல்வன் ஆகியோரின் வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, முதல்வருக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் மார்க்கண்டேயனை ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

   

இந்தக் கைதைத் தொடர்ந்து, திமுக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சுக்கு பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி முதலமைச்சரை விமர்சிப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், இதற்காக மார்க்கண்டேயனைக் கைது செய்த காவல்துறை நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பேசும் ஒரு கட்சியின் தலைமை, தன் உறுப்பினர்களை மரியாதையுடன் நடந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்றும் அவர் விமர்சித்தார்.

   

அத்துடன் நிறுத்திவிடாமல், கடந்த திமுக ஆட்சியின் போது அன்றைய நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை தரக்குறைவாகப் பேசிய போது அளிக்கப்பட்ட புகார்கள் மீது அன்றைய காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நாராயணன் திருப்பதி, தற்போதுள்ள முதல்வர் ஜோசப் விஜய் அந்த பழைய புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.