மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள போரசா தானியச் சந்தைப் பகுதியில், இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களில் வெங்காய மூட்டைகள் ஏற்றி வரப்பட்டு இறக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவசர கால மருத்துவ சேவைக்காகவும், நோயாளிகளை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் பயன்படுத்தப்பட வேண்டிய ஆம்புலன்ஸ் வாகனங்கள், வர்த்தக நோக்கத்திற்காக வெங்காய மூட்டைகளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டிருப்பது நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக சமூக வலைதளவாசிகளும் அப்பகுதி மக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் மக்கள் உடனடியாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். வீடியோவின் உண்மைத்தன்மை, அந்த ஆம்புலன்ஸ் வாகனங்களின் உரிமையாளர்கள் யார் மற்றும் அவசர ஊர்திகளைப் பொருட்களை ஏற்றிச் செல்ல அனுமதித்தது யார் என்பது குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
