திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிட்காயின் மற்றும் தங்கச் சுரங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி, சுமார் 30-க்கும் மேற்பட்டோரிடம் 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திருப்பத்தூரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மூலம் அறிமுகமான கேரளாவைச் சேர்ந்த வர்மா, சந்தோஷ்குமார், மனோஜ்குமார் ஆகிய மூவர் அடங்கிய கும்பல், தென் ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கமும் துபாயில் ஹோட்டல் தொழிலும் இருப்பதாகக் கூறி பொதுமக்களை நம்ப வைத்துள்ளனர். இவர்களது ஆசை வார்த்தைகளை நம்பி, பாதிக்கப்பட்ட மக்கள் செயலிகள் மூலம் தங்களின் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
தொடக்கத்தில் முதலீட்டாளர்களுக்குக் கூறியபடி சில மாதங்கள் கமிஷன் தொகையை முறையாக வழங்கியுள்ளனர். மேலும், புதிய நபர்களை இந்தத் திட்டத்தில் சேர்த்தால் 5 மடங்கு கூடுதல் கமிஷன் தருவதாகவும் ஆசை காட்டியுள்ளனர். இதனை நம்பி பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் இதில் முதலீடு செய்ய வைத்துள்ளனர். ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு முதலீட்டாளர்களால் அந்தச் செயலியிலிருந்து தங்களது பணத்தை எடுக்க முடியாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கேரளாவுக்கு நேரில் சென்று தங்களது பணத்தைக் கேட்டுள்ளனர்.
கேரளாவுக்குப் பணத்தைத் திரும்பக் கேட்கச் சென்ற முதலீட்டாளர்களுக்கு அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மோசடிக் கும்பல் தங்களது அடியாட்களை ஏவி, பணத்தைக் கேட்டவர்களை பிட்டுத் துணியோடு மிகக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளது. அடியாட்களின் கோரத் தாண்டவத்தைக் கண்டு அஞ்சிய முதலீட்டாளர்கள், “உயிரோடு திரும்பினால் போதும்” என்று அங்கிருந்து தப்பியோடி வந்துள்ளனர். இந்த மோசடி கும்பல் திருப்பத்தூர் மட்டுமின்றி திருவண்ணாமலை, சேலம், நாகப்பட்டினம், ஆரணி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் மொத்தம் 60 கோடி ரூபாய் வரை சுருட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி அக்சய் அனில் வாகரேவிடம் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, திருப்பத்தூரைச் சேர்ந்த வெங்கடேசன் (47) மற்றும் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மனோஜ்குமார் (46) ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கேரளாவைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளான வர்மா மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
