ஆந்திர மாநிலம் பங்கனூர் பகுதியில், மோட்டார் சைக்கிளை வீட்டிற்குள் இயக்கி வைத்திருந்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் 70 வயது முதியவர் ராமச்சந்திரய்யா, அவரது 15 வயது பேரன் கார்த்திக் மற்றும் 8 வயது இரட்டைப் பேத்திகளான சரிதா மற்றும் சந்தனா ஆகியோர் அடங்குவர்.
சம்பவம் குறித்த தகவலின்படி, சலூன் கடை நடத்தி வரும் முரளி, தனது மோட்டார் சைக்கிளில் இருந்த கோளாறைச் சரிசெய்ய மெக்கானிக்கிடம் கொடுத்துள்ளார். அப்போது, பிஸ்டனை மாற்றிய மெக்கானிக், பைக்கை இரவு முழுவதும் ஆஃப் செய்யாமல் ஆன் நிலையிலேயே வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மெக்கானிக்கின் இந்த ஆலோசனையைப் பின்பற்றிய முரளி, தனது மோட்டார் சைக்கிளை வீட்டிற்குள் நிறுத்தி, அனைத்து ஜன்னல்களையும் மூடிவிட்டு இரவு முழுவதும் இயங்க வைத்துள்ளார்.
அந்த நேரத்தில், முரளியும் அவரது மனைவியும் மொட்டை மாடியில் உறங்கச் சென்றதால் உயிர் தப்பினர். ஆனால், வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த முரளியின் தந்தை, மகன் மற்றும் இரண்டு பேத்திகள் மீது, பைக்கிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடு வாயு வீடு முழுவதும் பரவியது. இதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, தூக்கத்திலேயே அந்த நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை நால்வரும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதைக் கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூடிய அறைக்குள் வாகனங்களை இயக்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த சோக சம்பவம் உணர்த்துகிறது.
