விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தொடர்ந்து ஆண்டு தோறும் நடத்த திட்டமிட்டனர். இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிச்சயமான பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்தனர். கடந்த ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். ஏழு சீசங்களாக கமல்ஹாசனை பார்த்தவர்கள் எட்டாவது சீசனில் விஜய் சேதுபதி எப்படி தொகுத்து வழங்குவார் என்ற பெரும் எதிர்பார்ப்போடு இருந்தனர்.
ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் எந்தவித சர்ச்சையும் வராமல் விஜய் சேதுபதி சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். போட்டியாளர்களை இவர் நடத்திய விதம் ரசிகர்களையும் கவர்ந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இப்படியான நிலையில் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்போது நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் நடத்தப்பட்டாலும் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகாது என்று கூறப்படுகிறது.
காரணம் அண்மையில் விஜய் டிவியை அம்பானியின் ஜியோ நிறுவனம் வாங்கிய நிலையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் ஜியோ ஹாட்ஸ்டார் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே அம்பானிக்கு சொந்தமாக கலர்ஸ் என்ற சேனல் உள்ள நிலையில் தற்போது விஜய் டிவியும் அந்த நிறுவனம் வாங்கியுள்ளதால் விஜய் டிவியில் உள்ள பெரும்பாலான படங்கள் இனி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அதனைப் போலவே கலர்ஸ் தமிழ் கைவசம் இருந்த கே ஜி எஃப் போன்ற திரைப்படங்கள் விஜய் டிவியிலும் இனி ஒளிபரப்பு செய்யப்படும்.
இப்படி படங்கள் மட்டுமல்லாமல் விஜய் டிவி நிகழ்ச்சிகளும் இனி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அண்மையில் நிறைவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டு நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து வருகின்ற பிப்ரவரி 23 முதல் தினமும் இரவு 7 மணிக்கு பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மறுஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. எனவே பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.