தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தில் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி ஒரு ‘குட்டி ஸ்டோரி’ ஒன்றைக் கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிக்பாஸ் புகழ் ஜூலி வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் தீயாய் பரவியது. விஜய்யின் அரசியல் நகர்வுகளை விமர்சித்து ஜூலி பேசியதைத் தொடர்ந்து, தவெக ஆதரவாளர்கள் ஜூலியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கத் தொடங்கினர். தன்னை மிரட்டுவதாகவும், அவதூறு பரப்புவதாகவும் குற்றம் சாட்டிய ஜூலி, “என்னைப்பற்றி பேச வேண்டுமென்றால் நான் வீட்டிலோ அலுவலகத்திலோ தான் இருப்பேன், பனையூரை விட்டு நீங்கதான் வெளியே வரமாட்டீங்க” என விஜய்யை நேரடியாகக் கிண்டலடித்துப் பேசியது விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த மோதல் முற்றிய நிலையில், தற்போது சென்னையில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ நிகழ்ச்சியில் ஜூலி ஆவேசமாக ஆற்றிய உரை மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதில், “திராவிட அரசை வீழ்த்த டெல்லியில் இருந்து ரெய்டு மற்றும் சிபிஐ சோதனைகளை ஏவி விடுகிறார்கள். திரைத்துறையில் இருந்து இப்போது நிறைய ‘தளபதிகள்’ அரசியலுக்கு வருகிறார்கள். சிலர் ஓட்டுகளைப் பிரித்து மாநிலத்தையே ஆட்டையைப் போட்டுவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இது தமிழ்நாடு, இங்கே திராவிடக் கோட்டை வலுவாக இருக்கிறது” என்று விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் அவரை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்.
மேலும் தனது உரையில், “எந்த ஸ்டார் கடப்பாரையைக் கொண்டும், எந்த திரைத் தளபதி கடப்பாரையைக் கொண்டும் இந்தத் திராவிடக் கோட்டையை ஒன்றும் செய்ய முடியாது” என்று அதிரடியாகத் தெரிவித்தார். தவெக ஆதரவாளர்களின் தனிப்பட்ட தாக்குதல்களைக் குறிப்பிட்ட அவர், “எங்களை மாதிரி சின்ன சின்ன தடுப்புகள் இந்தக் கோட்டைக்கு முன்னால் இருக்கிறோம். எங்களை அசைக்கக் கூட முடியாது. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அவதூறு பரப்புங்கள், கேரக்டரைத் தவறாகப் பேசுங்கள், எதற்கும் அசர மாட்டோம். நாங்கள் சண்டை செய்து பழகிய கூட்டம்” என்று ஆவேசமாகப் பேசினார்.
கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் ‘விஜய் VS ஜூலி’ என்ற விவாதம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அண்மைக்காலமாக அமைதியாக இருந்த ஜூலி, தற்போது தவெக தலைவர் விஜய்யை தொடர்ந்து விமர்சித்து வருவதன் மூலம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளார். எவ்வளவு தனிமனிதத் தாக்குதல்கள் வந்தாலும் பின்வாங்கப் போவதில்லை என்ற ஜூலியின் இந்த நிலைப்பாடு, வரும் நாட்களில் விஜய்யின் அரசியல் பயணத்தில் ஜூலி ஒரு முக்கியமான விமர்சகராகத் தொடர்வார் என்பதைக் காட்டுகிறது.
