தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவை மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், அங்கு வானதி சீனிவாசன் போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதனால், கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்த அண்ணாமலைக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் பலமாக எழுந்துள்ளது.
பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் கோவையில் கூடுதல் தொகுதிகளைப் பெற்று, அங்கு அண்ணாமலையை களம் இறக்க வேண்டும் என உள்ளூர் நிர்வாகிகள் தீவிரமாக உழைத்து வந்தனர். ஆனால், தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இந்த அதிரடி மாற்றம் அண்ணாமலை ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில காலங்களாகவே கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல்கள் மற்றும் மேலிடத்துடனான பனிப்போர் காரணமாகவே அவர் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதாக இணையதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.
அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது அதிமுக தலைவர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசிய விமர்சனங்களே அவருக்கு இப்போது வினையாக முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலையின் அதிரடிப் பேச்சால் அதிருப்தியடைந்த எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை வகித்த பதவியில் மாற்றங்கள் நிகழ்ந்த பிறகே கூட்டணியை உறுதிப்படுத்தினார். தற்போது தொகுதிப் பங்கீட்டின் மூலம் அண்ணாமலைக்குச் சீட் கிடைக்காதவாறு காய் நகர்த்தி, தனது பழைய கோபத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கட்சிக்குள்ளேயே வானதி சீனிவாசன், எல். முருகன் போன்ற மூத்த தலைவர்களுடன் நிலவும் போட்டி மற்றும் அண்ணாமலை மீதான சில புகார்கள் டெல்லி தலைமைக்குச் சென்றதும் இந்த முடிவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. “சொந்த மாவட்டமான கரூரில் நின்று தனது செல்வாக்கை அண்ணாமலை நிரூபிக்கட்டும்” என அவருக்கு எதிரான தரப்பினர் போர்க்கொடி தூக்கியதும், சிங்காநல்லூர் தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து அவராகவே விலகியதும் அண்ணாமலைக்கு இந்தத் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இளைஞர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்திய ஒரு தலைவரை, சொந்தக் கட்சியினரும் கூட்டணிக் கட்சியினரும் இணைந்து முட்டுக்கட்டை போடுவது முறையல்ல என்பது தொண்டர்களின் வாதமாக உள்ளது. கோவையில் அண்ணாமலைக்கு இருக்கும் செல்வாக்கைக் கண்டு அஞ்சி மற்ற தலைவர்கள் அவரைத் தடுத்து நிறுத்துகிறார்களா அல்லது இது யதேச்சையாக நடந்ததா என்பது புதிராகவே உள்ளது. எது எப்படியோ, கோவை தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்ட நிலையில், வரும் நாட்களில் இன்னும் பல திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.
