ஒடிசா மாநிலத்தில், விபத்தில் குடல் வெளியேறிய நிலையிலும் பதற்றமடையாமல் தனது சட்டையால் வயிற்றைக் கட்டிக்கொண்டு வீட்டிற்கு நடந்து வந்த 11 வயது சிறுவனின் துணிச்சலான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கஞ்சம் மாவட்டம் தாராகோட் சமிதிப் பகுதியில் உள்ள தனார்ஜிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்னு மல்லிக் என்ற சிறுவன், கடந்த ஆகஸ்ட் 17 அன்று பள்ளிக்குச் செல்லும்போது மலைப்பாதையில் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானான். அப்போது தரையிலிருந்த கூர்மையான கல் குத்தியதில் சிறுவனின் வயிறு கிழிந்து குடல் வெளியே வந்தது.
காயத்திலிருந்து ரத்தம் அதிகளவில் வெளியேறிய நிலையிலும், சின்னு சிறிதும் பயப்படாமல் மனஉறுதியுடன் செயல்பட்டான். உடனடியாகத் தன் சட்டையைக் கழற்றி, வெளியே வந்த குடலை கவனமாக சுற்றிக் கட்டிக்கொண்டு, மிதிவண்டியை அங்கேயே விட்டுவிட்டு ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வீட்டிற்கு நடந்து சென்றான். ரத்தம் சொட்டச் சொட்ட மகன் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் ரஞ்சிதா மல்லிக், உடனடியாகக் குடும்பத்தினரை அழைத்துச் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்.
சிறுவன் வசிக்கும் கிராமத்திற்குச் சரியான சாலை வசதி இல்லாததால், ஆம்புலன்ஸ் வாகனம் வர முடியாத சூழல் நிலவியது. இதனால் குடும்பத்தினர் சிறுவனை இருசக்கர வாகனத்தில் 10 கிலோமீட்டர் தூரம் அழைத்துச் சென்று படகடா சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக பிரம்மபூரில் உள்ள MKCG மருத்துவமனைக்குச் சிறுவன் விரைவாகக் கொண்டு செல்லப்பட்டான்.
மருத்துவமனையில் சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற தீவிர அறுவை சிகிச்சைக்குப் பின், வெளியே வந்த குடல் பகுதி மீண்டும் வெற்றிகரமாகச் சரி செய்யப்பட்டது. தற்போது சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவனின் உடனடிச் செயல்பாடும் தன்னம்பிக்கையும்தான் அவனது உயிரைக் காப்பாற்ற முக்கியக் காரணமாக அமைந்தது என்றும் மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர். இச்சம்பவம் ஒடிசா முழுவதும் பரவி, சிறுவனின் தைரியத்திற்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
