இளையராஜாவின் மகள் பவதாரணி, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை இலங்கையில் காலமானார். அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் இலங்கையில் உள்ள அந்த புற்றுநோய் சிகிச்சைக்கான ஆயுர்வேத மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.இந்நிலையில், இலங்கையில் இசைக்கச்சேரி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் பங்கேற்பதற்காக இளையராஜாவும் இலங்கைக்கு 3 நாட்களுக்கு முன் சென்றிருக்கிறார்.
புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையில் 10 நாட்களுக்கு முன் சேர்க்கப்பட்ட பவதாரணிக்கு சிகிச்சை ஆரம்பிப்பதே தள்ளிப் போயிருக்கிறது. முதலில் அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. மேலும் உடல் வெப்ப நிலை, ரத்த அழுத்தம் என மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை துவங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் மருத்துவமனை ஊழியர்கள் இருந்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் இளையராஜா இருக்கும் தகவலை அறிந்த பவதாரணி, திடீரென அப்பாவை பார்க்க வேண்டும் என்று மிகுந்த ஆசைப்பட்டு இருக்கிறார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டாக்ஸி ஒன்றை பிடித்துக்கொண்டு நேராக இளையராஜா ஆர்க்கெஸ்டரா நடத்தும் இடத்துக்கே சென்றுள்ளார். அங்கு ரிகர்சலில் இருந்த இளையராஜா, பவதாரணி அங்கு வந்ததை பார்த்து அதிர்ந்து போய்விட்டார். நீ எதுக்கும்மா இங்க வந்தே? என பதறிப்போய், நானே மருத்துவமனைக்கு பின்னால் வருகிறேன்.
நீ முதலில் மருத்துவமனைக்கு போ, என்று அதே டாக்ஸியில் மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார். அப்போது டாக்ஸியில் போய் வந்த நிலையில், பொல்யூசன் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றவுடனேயே பவதாரணிக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டு, தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்தும், அவசர கட்ட சிகிச்சை அளித்தும் பலனின்றி அடுத்த நாள் (நேற்று) மாலை இறந்திருக்கிறார். இறப்பு தன்னை மிக நெருங்கிய நிலையில்தான், தன்னை பெற்ற தந்தையை கடைசியாக நேரில் பார்க்க, மருத்துவமனையில் இருந்து டாக்ஸி பிடித்து பவதாரணி வந்ததை அறிந்து பலரும் கண்ணீர் வடிக்கின்றனர்.