தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
அவர் இயக்குனர் ஆனதும் முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அதுமட்டுமில்லாமல அவர்களை நட்சத்திரங்களாக உருவாக்கினார். அவர் அறிமுகப்படுத்திய ராதா, ரேவதி, ராதிகா, ரேகா உள்ளிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் என பெயரெடுத்தனர்.
16 வயதினிலே படத்தின் ஒவ்வொரு அம்சமும் ரசிகர்களைப் படம் பார்த்து திகைக்க வைக்கும் இருந்தது. பாரதிராஜாவின் அட்டகாசமான விஷுவல்கள், இளையராஜாவின் உள்ளத்தைத் தொடும் இசை, ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவியின் அட்டகாசமான நடிப்பு என ஒவ்வொன்றும் மிளிர்ந்தது. இந்த படத்துக்கு முன்பு வரை கமல்ஹாசன் ஒரு சாக்லேட் பாயாக, பெண்கள் ரசித்துப் பார்க்கும் நடிகராக இருந்தார்.
ஆனால் இந்த படத்தில் கிராமத்து வெள்ளந்தி இளைஞராக சப்பாணி வேடத்தில் நடித்திருப்பார். படத்தின் ஒரு காட்சியில் கோவணம் மட்டும் அணிந்து நடித்திருப்பார். இதெல்லாம் அந்த படத்தை ரசிகர்கள் வாய்பிளந்து பார்க்க காரணமாக அமைந்தன. படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையிலும் இன்றளவும் அந்த படம் க்ளாசிக் படமாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை ரீமேக் செய்யலாம் என பாரதிராஜா சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆலோசித்ததாக பிரபல இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். மேலும் அதற்குத் தன்னைதான் இசையமைப்பாளராக நியமித்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்கவில்லை.
பாரதிராஜா 16 வயதினிலே படத்தை ரீமேக் செய்ய ஆசைப்பட்டது ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் க்ளாசிக் படங்களை எல்லாம் தொடக்கூடாது என்று அவரே ஒருமுறை சொன்னதும் சரிதான் என்று தோன்றுகிறது.
