முந்தானை முடிச்சு படமெல்லாம் எடுக்குறீங்க… இப்ப இரண்டாவது கல்யாணம் வேண்டாம்- அறிவுரை சொன்னவர்களுக்கு பாக்யராஜின் பதில் இதுதான்!

By vinoth on ஆவணி 1, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.

பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அவரே கதாநாயகனாக இருந்ததால் தனக்கான கதைகளை மட்டுமே எழுதவேண்டிய சூழல் வந்ததால் அவரால் இயக்குனராக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் ஜொலிக்க முடியவில்லை.

   

பாக்யராஜ் தான் இயக்குனராக முத்திரைப் பதித்த பின்னர் பிரவீனா என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார். அவரும் ஒரு நடிகைதான். பாக்யராஜ் உதவியாளராக இருந்தபோதே பிரவீனாவோடு அவருக்கு காதல் மலர்ந்தது. தான் இயக்குனர் ஆனால் உன்னைதான் திருமணம் செய்துகொள்வேன் என்ற உறுதி மொழியை காப்பாற்றி பிரவீனாவை திருமணம் செய்துகொண்டார்.

   

ஆனால் பிரவீனா திருமணம் முடிந்து சில ஆண்டுகளிலேயே உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அப்போது பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டாகி இருந்தது. பிரவீனா இறந்த ஒரு ஆண்டுக்குள்ளாகவே நடிகை பூர்ணிமாவைத் திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்துள்ளார்.

 

அப்போது அவர் கூட இருந்தவர்கள் “இப்போதுதான் முந்தானை முடிச்சு படத்தில் நடித்தீர்கள். அதில் இரண்டாவது கல்யாணம் செய்துகொள்ள தயங்கும் நபராக நடித்தீர்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் மனைவி இறந்த உடனேயே மறுகல்யாணம் செய்தால் உங்கள் இமேஜ் பாதிக்கப்படும்” எனக் கூறியுள்ளனர்.

அதற்கு பாக்யராஜ் “எனக்கு அறிவுரை செய்ய வீட்டில் பெரியவர்கள் இல்லை. மனைவியும் இறந்துவிட்டார். அதனால் எனக்கென்று கட்டுபாடுகள் இல்லாமல் போய்விட்டால் நான் தவறான பாதையில் போய்விட வாய்ப்பிருக்கு. அதனால் எனக்கு கட்டுப்பாடு இப்போது தேவை” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த முடிவைக் கேட்ட எம் ஜி ஆர் சரியான முடிவு என சொல்லி திருமணத்தை முன்னின்றும் நடத்தி வைத்துள்ளார்.