தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.
பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அதன் பிறகு பெரும்பாலும் அவர் ஹீரோவாக நடிக்கவே முன்னுரிமை கொடுத்தார். 80 களில் முன்னணி நடிகராக இருந்த அவர் 90 களில் தனது மார்க்கெட்டை இழக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு சொக்கத்தங்கம் மற்றும் பாரிஜாதம் என இயக்குனராக மட்டும் கவனம் செலுத்தினார். ஆனால் அந்த படங்கள் பெரியளவில் ஓடாததால் அவரால் இயக்குனராக அதன் பின்னர் தொடர முடியவில்லை. அதன் பின்னர் குணச்சித்திர நடிகராக இப்போது கலக்கி வருகிறார்.
பாக்யராஜ் இப்போது ட்ரண்ட்டில் இல்லை என்றாலும் தற்போது தமிழ் சினிமாவில் ட்ரண்டாக இருக்கும் சில விஷயங்களை அப்போதே பாக்யராஜ் தன்னுடைய படங்களில் செய்துள்ளார். தற்போது இயக்குனர்கள் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற ஒன்றை உருவாக்கி வருகின்றனர். அதாவது தங்கள் படங்களில் இடம்பெறும் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் இன்னொரு படத்திலும் இடம்பெறுவது போல உருவாக்குவது. இதை வெற்றிகரமாக செய்து கலக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ்.
ஆனால் இதை 40 ஆண்டுகளுக்கு முன்பே இயக்குனர் பாக்யராஜ் செய்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். எம் ஜி ஆர் முதலமைச்சர் ஆவதற்கு முன்னால் நடித்த படங்களில் ஒன்று ‘அண்ணா நீ என் தெய்வம்’.. இந்த படத்தின் சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்ட நிலையில் அவர் முதல் அமைச்சர் ஆகிவிட்டதால் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னர் அந்த படம் தொடங்கப்படவேயில்லை.

அதன் பின்னர் 10 ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் காட்சிகளைப் போட்டுப் பார்த்த பாக்யராஜ் அதற்கேற்றார் போல திரைக்கதை எழுதி இயக்கிய படம்தான் ‘அவசர போலீஸ் 100’. இந்த படம் எம் ஜி ஆரின் மறைவுக்குப் பின் ரிலீஸானது. இதில் எம் ஜி ஆர் நடித்தக் காட்சிகளும் இடம்பெற்றன.
