பெங்களூரு பஸ்ஸில் நடந்த ட்விஸ்ட்… மாஸ்க் அணிந்து வந்த நபரை இறக்கிவிட்ட கண்டக்டர்… சாதாரண பயணி போல வந்த அமைச்சருக்கே நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Visaka on ஆடி 12, 2026

Spread the love

கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ், பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் முகக்கவசம் அணிந்து சாதாரண பயணியாக திடீர் ரகசிய ஆய்வுகளை மேற்கொண்டார். ஹெப்பால் பகுதியில் இருந்து நாகஷெட்டிஹள்ளிக்குச் செல்ல பேருந்தில் ஏறிய அமைச்சர், இரண்டு டிக்கெட்டுகளுக்கு 100 ரூபாய் நோட்டைக் கொடுத்துள்ளார். தன்னிடம் சில்லறை இல்லை எனக்கூறிய நடத்துநர், சரியான சில்லறை இல்லையென்றால் பேருந்தை விட்டு கீழே இறங்குமாறு அமைச்சரிடமே கறாராகக் கூறியுள்ளார். தனது அடையாளத்தை வெளிப்படுத்தாத அமைச்சர், எவ்வித வாக்குவாதமுமின்றி அமைதியாகப் பேருந்தில் இருந்து இறங்கிச் சென்ற சம்பவம் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

பொதுப்போக்குவரத்தில் பயணிகள் அன்றாடம் சந்திக்கும் இடையூறுகளை நேரடியாகப் புரிந்துகொள்ளும் நோக்கில், இரவு 7.10 மணி முதல் 9.10 மணி வரை சுமார் இரண்டு மணிநேரம் 10 பேருந்துகளில் அவர் இந்த ஆய்வை நடத்தினார். ஜெயாமஹால், ஆர்.டி நகர், ஹெப்பால் உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த இந்த ஆய்வின் போது, மற்றொரு அரசுப் பேருந்து ‘ஃபன் வேர்ல்ட்’ நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதை அமைச்சர் கவனித்தார். பயணி ஒருவர் கேட்டும் பேருந்தை நிறுத்தாமல் சென்ற அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் அதிரடி உத்தரவிட்டார்.

   

பேருந்துகள் மட்டுமின்றி ஆட்டோக்களிலும் அமைச்சர் தனது ஆய்வைத் தொடர்ந்தார். ஒரு கிலோமீட்டர் தூரம் ஆட்டோவில் பயணித்த அவருக்கு மீட்டரில் 30 ரூபாய் மட்டுமே கட்டணம் காட்டிய நிலையில், ஆட்டோ ஓட்டுநர் 36 ரூபாய் கேட்டுள்ளார். பயணிகளிடம் இவ்வாறு அதிக கட்டணம் வசூலிக்கப்படும் பிரச்னையையும் அவர் உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார். பெங்களூரு நகரம் முழுவதும் பாதுகாப்பான, பொறுப்பான மற்றும் நம்பத்தகுந்த பொதுப்போக்குவரத்தை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என தனது இந்த திடீர் கள ஆய்வு அனுபவங்களை அமைச்சர் பைரதி சுரேஷ் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.