புனே நகரில் அண்மையில் பெய்த கனமழையின் போது, மூன்று பெண் பயணிகளிடம் கேப் ஓட்டுநர் ஒருவர் நடந்துகொண்ட விதம் இணையதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியாகப் பதிவு செய்யப்பட்ட அந்த வாடகை காரில், பெண் பயணிகள் மூவர் பயணித்துக் கொண்டிருந்தபோது, வழியில் தனது நண்பரையும் காரில் ஏற்றிக் கொள்ள அனுமதிக்குமாறு ஓட்டுநர் கேட்டுள்ளார். காரில் போதுமான சி.என்.ஜி எரிபொருள் இல்லாததால், தனது நண்பரைத் தனிப்பயணமாக இறக்கிவிட முடியாது என்றும், ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும் அவரை உடன் பயணிக்க “அட்ஜஸ்ட்” செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். அறிமுகமில்லாத ஒருவரை ஏற்ற முடியாது என்று அப்பெண்கள் உறுதியாக மறுத்ததை அடுத்து, “பிடிக்கவில்லை என்றால் வேறு காரை பதிவு செய்து கொள்ளுங்கள்” எனக் கூறி, கனமழை என்றும் பாராமல் அப்பெண்களை நடுவழியிலேயே இறங்கிப் போகச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
https://www.instagram.com/p/Da2S6zwCHJb
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் ஓட்டுநரின் பொறுப்பற்ற செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்திப் பதிவு செய்யும் காரில், அவர்களின் அனுமதியின்றி வேறு நபர்களை ஏற்றுவதற்கு ஓட்டுநருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், “அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்” என்ற இந்த அலட்சியப் போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட கேப் நிறுவனமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
