பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட ஒரு தட்டு ‘நெய் பொடி இட்லி’யின் விலை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பயணி ஒருவர் தான் வாங்கிய இட்லியின் ரசீதை இணையத்தில் பகிர, அதில் இரண்டு இட்லிகள் கொண்ட ஒரு தட்டின் விலை 315 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. சாதாரண உணவகங்களில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் இட்லிக்கு, விமான நிலையத்தில் இவ்வளவு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது நியாயமா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து நெட்டிசன்கள் பலதரப்பட்ட கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “விமான நிலையங்களில் உணவுகளின் விலை கட்டுக்கடங்காமல் செல்வதாகவும், இது நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் சுமையாக இருப்பதாகவும்” ஒரு தரப்பினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். அதே சமயம், விமான நிலையங்களின் அதிகப்படியான வாடகை மற்றும் பராமரிப்பு செலவுகள் காரணமாகவே உணவுகளின் விலை இவ்வளவு அதிகமாக இருப்பதாக மற்றொரு தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். எது எப்படியோ, இந்த 315 ரூபாய் இட்லி தற்போது இணையத்தில் ‘ஹாட் டாபிக்’ ஆக மாறியுள்ளது.
