ஒரு படத்துக்கு பின்னணி இசையை யார் தீர்மானிப்பது.. இளையராஜா கேட்ட கேள்வி- பாலு மகேந்திரா கொடுத்த அருமையான விளக்கம்!

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் மட்டுமில்லை, இந்திய சினிமாவிலெயே அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்தவர் இளையராஜா. அவரை இசைஞானி, ராகதேவன் என பல பெயர்களில் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். இளையராஜாவின் தனிச்சிறப்பே அவர் படங்களுக்கு அமைக்கும் பொருத்தமான பின்னணி இசைதான்.

   

ஆரம்பத்தில் சில படங்களில் பின்னணி இசையமைக்க தான் தடுமாறியதாகவும், 16 வயதினிலே உள்ளிட்ட்ட சில படங்களுக்கு பிறகே தன்னுடைய பாணியை கண்டுபிடித்துக் கொண்டதாகவும் இளையராஜாவே தன்னுடைய நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில் மூடுபனி படத்தின் போது பின்னணி இசை அமைப்பது சம்மந்தமாக இளையராஜாவுக்கும் தனக்கும் இடையே ஏற்பட்ட உரையாடல் ஒன்றை பாலு மகேந்திரா பதிவு செய்துள்ளார். அந்த படத்தின் போது ஒரு படத்தின் பின்னணி இசையை யார் தீர்மானிப்பது என பாலு மகேந்திராவிடம் கேட்டுள்ளார் இளையராஜா.

அவருக்கு பாலு மகேந்திரா “ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து அதாவது ‘நதிமூலம்’ என்று சொல்லப்படும் அதன் தொடக்கத்திலிருந்து கடலில் சென்று கலக்கும் வரை மாறிக் கொண்டே இருக்கும் அதன் தோற்றத்தையும், வேகத்தையும், ஆழத்தையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்…

ஆரம்பிக்கும் இடத்தில் அது ஒரு சிறிய ஊற்றாக இருக்கலாம். அப்படி ஆரம்பிக்கும் அந்த நதி சற்றுத் தள்ளி ஒரு சிறிய அருவியாக ஓடுகிறது. இன்னும் சற்றுத் தொலைவில் வேறு சிற்றருவிகள் சில அதனுடன் சேர்ந்து கொள்ள,அது ஒரு காட்டருவியாக உருமாறுகிறது. அதன் தோற்றத்திலும், வேகத்திலும் கணிசமான மாற்றத்தைப் பார்க்க முடிகிறது.

இன்னுமொரு இடத்தில் நெடிதுயர்ந்து நிற்கும் பாறைகளிலிருந்து பேரழகும், பேரிரைச்சலும் கொண்ட நீர்வீழ்ச்சியாகக் கொட்டுகிறது. வேறு ஒரு இடத்தில் அது விரிந்து பரந்த நீர்த்தேக்கமாக ஸ்தம்பித்து நிற்பது போன்ற தோற்றத்துடனும் அதிக ஆழத்துடனும் காட்சியளிக்கிறது. அந்த நீர்த்தேக்கத்திலிருந்து வழிந்து கீழே உள்ள கூழாங்கற்களின் மீது ஒரு குட்டிப் பெண்ணின் குதூகலத்துடனும் சிலு சிலு என்ற சத்தத்துடனும் ஸ்படிகம் போன்ற தெளிவுடனும் துள்ளிக் குதித்தபடித் தொடர்கிறது.

இன்னும் சில இடங்களில் அது நிலத்தடி நீராக மாறிக் காணாமல் போய் விடுகிறது. பிறிதொரு இடத்தில் பொங்கும் சுனையாக அது வெளியே வந்து அகலம் குறைந்து, வேகம் அதிகரித்து அவசரம் அவசரமாக ஓடிச்சென்று கடலுடன் கலக்கிறது. இப்படியாக ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து இறுதியில் கடலுடன் சென்று கலக்கும் வரை அதன் தோற்றத்திலும் வேகம் மற்றும் ஆழம் ஆகியனவற்றிலும் மாறிக் கொண்டே இருக்கின்றது.

இந்த மாற்றங்களையெல்லாம் நதியா தீர்மானிக்கிறது?  இல்லவே இல்லை. ஒரு நதியின் அனைத்து மாற்றங்களையும் அதன் கீழேயுள்ள நிலப்படுகை தானே – நிலத்தின் அமைப்பு தானே தீர்மானிக்கிறது ! இதுபோலத்தான் ஒரு திரைப்படத்தின் இசையும். ஒரு திரைப்படத்திற்கான இசையை, குறிப்பாக அதன் பின்னணி இசையை, அந்தப் படம் தான் – அந்தப் படத்தின் திரைக்கதை தான் script-தான்  தீர்மானிக்கிறது. இசை மட்டுமல்ல, ஒளிப்பதிவையும், ஒலி அமைப்பையும், நடிப்பையும், படத்தொகுப்பையும், உடைகளையும் மற்றும் அந்தப் படத்தின் சகலத்தையும் தீர்மானிப்பது அதன் திரைக்கதை தான்! அதன் script-தான்” எனக் கூறியுள்ளார்.

பாலு மகேந்திராவின் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட இளையராஜா அவருக்குக் கைதட்டி தன்னுடைய ஆமோதிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இருவரும் இணைந்த படங்களில் அவர்களின் பின்னணி இசை நினைவில் நிற்கும் ஒன்றாக அமைந்ததற்கு இருவருக்கும் இடையிலன ஆழமான இந்த புரிதலே காரணம் என்றும் சொல்லலாம்.