பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்டான சேது திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க முதலில் முரளிதான் ஒப்பந்தம் ஆனாராம். அப்போது அவர் பிஸியான நடிகராக இருந்தும் அந்த படத்துக்காக மொட்டை அடிக்க துணிச்சலாக சம்மதித்தாராம். ஆனால் அது நடக்காததால் அதன் பின்னர் விக்ரம்மை வைத்து சேது படத்தை எடுத்து பல போராட்டங்களுக்குப் பிறகு படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அந்த படத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அரிய ரத்தினங்கள் என்று பாலா, அமீர், விக்ரம் மற்றும் சசிகுமார் ஆகியோர்களை சொல்லலாம். அந்த படத்தில் இருந்துதான் அவர்களெல்லாம் புகழ் வெளிச்சம் பெற்று தங்களுடைய அடுத்தடுத்த படைப்புகளைக் கொடுத்தார்கள்.
இதில் இயக்குனர் அமீர் கொடுத்த கலையுச்சம் பெற்ற படைப்பு என்று பருத்திவீரன் படத்தை சொல்லலாம். அந்த படத்தில் கார்த்தியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி அவருக்கு 100 படங்களில் நடித்த கதாநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பைக் கிடைக்கவைத்தார். அந்த படைப்பின் பாதியைத் தொடுமளவுக்குக் கூட அமீரால் தன்னுடைய அடுத்த படத்தைக் கொடுக்க முடியவில்லை.
இந்நிலையில் அமீர் நடிகராக உருவாகி பல படங்களில் நடித்துவிட்டார். அவர் இயக்கத்தில் தொடங்கப்பட்ட சந்தன தேவன் மற்றும் இறைவன் மிகப் பெரியவன் ஆகிய படங்கள் ஃபைனான்ஸ் பிரச்சனை காரணமாக தடைபட்டு நிற்கின்றன.
இந்நிலையில் அமீர் ஒரு நிகழ்ச்சியில் தனக்கும் பாலு மகேந்திராவுக்குமான உறவு பற்றி பேசியுள்ளார். அதில் “பாலாவுக்கு முன்பே எனக்கு பாலு மகேந்திராவை தெரியும். அவர் ஒருமுறை கொடைக்கானல் செல்வதற்காக மதுரை வந்தபோது நான்தான் அவரை அழைத்துச் சென்றேன். ஆனால் அப்போது நான் சினிமாவுக்கு வந்திருக்கவில்லை.
நான் சினிமாவுக்கு வந்து மௌனம் பேசியதே இயக்கி அதன் பிறகு ராம் படத்தை நானே தயாரித்த போது அதன் தொடக்க விழாவுக்கு பாலு மகேந்திரா அவர்களை அழைத்தேன். ஆனால் அப்போது அவர் எனக்கும் பாலாவுக்கும் சிறு கருத்து வேறுபாடு இருப்பது தெரிந்து வரமறுத்துவிட்டார்.” எனக் கூறியுள்ளார்.