உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் குஜைனி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஆனந்த், அரசுப் பணி கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் கல்லூரி அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றதுடன், மாநில அளவில் 3-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தவர் ஆனந்த். இவரது அண்ணன் திருமணத்திற்காகக் குடும்பத்தினர் பீகார் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஆனந்த் இந்தத் தீவிர முடிவை எடுத்துள்ளார்.
கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு, எப்படியாவது அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் ஆனந்த் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீவிரமாகப் படித்து வந்துள்ளார். இதற்காகத் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். இரயில்வே துறை, மத்திய பணியாளர் தேர்வாணையம் வங்கிகள் மற்றும் கல்வித்துறை எனப் பலதரப்பட்ட தேர்வுகளை அவர் தொடர்ந்து எழுதி வந்ததாகக் கூறப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 50 முறைக்கும் மேலாகப் பல்வேறு அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை எழுதியும், அவரால் ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை. திறமை இருந்தும் தொடர் தோல்விகளைச் சந்தித்ததால் ஆனந்த் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனமுடைந்த அவர், மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஜன்னல் வழியாக இதைப் பார்த்த வேலைக்காரர் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் கதவை உடைத்து உடலைக் கைப்பற்றினர்.
சம்பவ இடத்திலிருந்து போலீசார் கைப்பற்றிய ஆனந்தின் உருக்கமான தற்கொலைக் கடிதம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. அதில், “என்னை மன்னித்து விடுங்கள் அப்பா… அரசு வேலைக்காக 50 முறை முயற்சி செய்துவிட்டேன், ஆனால் என்னால் வெற்றி பெற முடியவில்லை; என்னை மன்னித்து விடுங்கள்” என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். திறமையான ஒரு தங்கப்பதக்க வெற்றியாளர், தேர்வுத் தோல்விகளால் மனமுடைந்து தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
