நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாகத் தொடங்கி, சில வாரங்களிலேயே மந்தமடைந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் கவலையடைந்திருந்தனர். இருப்பினும், தற்போது செயற்கைக்கோள் படங்கள் மூலம் வெளியாகியுள்ள ஒரு காட்சி வானிலை ஆய்வாளர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவிலிருந்து இமயமலை மற்றும் சீனா வழியாகத் தென் கொரியா, ஜப்பான் வரை சுமார் 7,000 முதல் 10,000 கிலோமீட்டர் நீளத்திற்குப் பிரம்மாண்டமான மழை மேகப் பட்டை உருவாகியுள்ளது. “பருவமழை கன்வெர்ஜென்ஸ் மண்டலம்” என்று அழைக்கப்படும் இந்த மாபெரும் மேகக் கூட்டம், இந்த ஆண்டின் மிகவும் தீவிரமான பருவமழை சீசனைத் தொடங்கி வைத்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் இருந்து வீசும் அதிக ஈரப்பதம் நிறைந்த காற்று, ஆசியாவின் பிற வானிலை அமைப்புகளுடன் இணைந்ததன் காரணமாகவே இந்த நீண்ட மேகத் தொடர் உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக இந்தியாவில் பருவமழை வழக்கமான சராசரியை விட 170 முதல் 180 சதவீதம் வரை அதிகமாகக் கொட்டித் தீர்த்து வருகிறது. மத்திய, வட மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளை அடர்ந்த மழை மேகங்கள் சூழ்ந்துள்ளதால், அரபிக்கடல் முதல் மேற்கு பசிபிக் பெருங்கடல் வரையிலான ஆசிய நாடுகள் முழுவதிலும் தொடர்ச்சியாகப் பரவலான கனமழை பெய்து வருகிறது.
இந்தத் திடீர் மாற்றத்தால் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நிலவி வந்த மழைப் பற்றாக்குறை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் மழை தீவிரமடைந்துள்ளது. எனினும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் இத்தகைய மிகக் கனமழை காரணமாகத் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
