“என் ஆட்டோ மேலயே மோதுறியா?”.. வேன் டிரைவரை ஒரே குத்தில் சாய்த்த ஆட்டோ ஓட்டுநர்.. சென்னையில் பயங்கரம் சம்பவம்…!!!

By Muthu Mani on வைகாசி 21, 2026

Spread the love

சென்னை ராயபுரம் கல்லறை சாலை சந்திப்பில் நிகழ்ந்த சாலை விபத்து தகராறில், லோடு வேன் ஓட்டுநர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயபுரம் பகுதியைச் சேர்ந்த ரகு (42) என்பவர் கேஸ் சிலிண்டர் ஏற்றிய லோடு வேனை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது வேன் அங்கிருந்த ஆட்டோ ஒன்றின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநரான மணிகண்டன் (32), லோடு வேன் ஓட்டுநர் ரகுவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையேயான தகராறு முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற மணிகண்டன், ரகுவின் மார்புப் பகுதியில் பலமாக குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த ரகு, மாரடைப்பு அல்லது பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே துடிக்கத் துடிக்க உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உடனே ராயபுரம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த ரகுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வேன் ஓட்டுநரைத் தாக்கி கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டனை போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.