உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ் என்ற இனிப்புக் கடை உரிமையாளர் உயிரிழந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து காரை ஓட்டிச்சென்ற தேவராஜ் சிங்கின் உறவினர் மருமகன், அண்ணன் மகன் விக்ராந்த் சிங், இருசக்கர வாகனத்தின் மீது வேண்டுமென்றே காரை ஏற்றி இக்கொடூரச் செயலைச் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இச்சம்பவத்தில் மனோஜ் உயிரிழந்த நிலையில், அவருடன் வந்த மற்றொரு நபர் படுகாயமடைந்தார்.
விபத்து நிகழ்ந்ததும் தனது உறவினரைக் காப்பாற்ற நினைத்த முன்னாள் பாஜக பிரமுகர் தேவராஜ் சிங், விபத்தின்போது காரை ஓட்டுநர் தான் இயக்கினார் எனக் கூறி வழக்கை திசைதிருப்பவும் ஆதாரங்களை மறைக்கவும் முயன்றார். ஆனால், ஓட்டுநர் அந்தப் பழியை ஏற்க மறுத்து உண்மை நிலையை விளக்கியதுடன், சம்பவம் நடந்த நேரத்தில் அவர் வீட்டில் இருந்ததை அவரது தொலைபேசி அழைப்பு விவரங்களும் உறுதி செய்தன. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அலிகார் காவல்துறை, விக்ராந்த் சிங்கை கைது செய்தது; மேலும் காவல்துறையைத் தவறாக வழிநடத்த முயன்ற பாஜக பிரமுகர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
