மதுரை மாவட்டம் சோழவந்தானில் சாலையின் நடுவே காரை நிறுத்தியிருந்ததைத் தட்டிக்கேட்ட அரசு பேருந்து ஓட்டுநர் பிரசாத் என்பவரை, தமிழக வெற்றிக் கழக (தவெக) பிரமுகர் தனுஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் கத்தியால் கொடூரமாக வெட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், படுகாயமடைந்த ஓட்டுநர் பிரசாத் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தைக் கண்டித்தும், ஓட்டுநருக்குப் பாதுகாப்பு கோரியும் 250-க்கும் மேற்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் மதுரை சோழவந்தான் பணிமனையில் சுமார் 4 மணி நேரம் அதிரடியாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட தவெக பிரமுகர் தனுஷ் மற்றும் அவரது கும்பலை போலீஸார் விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் மீண்டும் மாநிலம் தழுவிய அளவில் கடுமையான போராட்டம் வெடிக்கும் என்றும் தொழிற்சங்கத்தினர் அரசுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
