மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே உள்ள இகத்புரி பவ்லி அணை மற்றும் நீர்வீழ்ச்சி பகுதிக்கு, பகவத் என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்றுள்ளார். அங்கு இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த சில நபர்கள் பகவத்தின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனை பகவத் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், மரக்கட்டைகள் மற்றும் இரும்பு கம்பிகளால் குடும்பத்தினரைத் தாக்க முயன்றது. இதனால் பயந்துபோன அவர்கள், உயிருக்கு பயந்து தங்களது காரில் ஏறி அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.
ஆனால், அந்தக் கும்பலைச் சேர்ந்த இருவர் பைக்கில் அந்த காரை விடாமல் துரத்தத் தொடங்கினர். நள்ளிரவு நேரத்தில் ஆள்நடமாட்டமில்லாத நெடுஞ்சாலையில், சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு சினிமாவை விஞ்சும் வகையில் இந்த சேஸிங் நடந்துள்ளது. காரை நெருங்கிய அந்த நபர்கள், தங்களது கைகளில் இருந்த ஆயுதங்களால் காரின் முன் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். மேலும், காரில் இருந்த அந்தப் பெண்ணைக் கொடூரமாக அடித்து உதைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்தப் பெண், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவங்கள் அனைத்தும் காரில் இருந்த கேமராவில் அப்படியே பதிவாகியிருந்தன. அந்த வீடியோ ஆதாரங்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, நாசிக் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ நடந்த சில மணி நேரங்களிலேயே தாக்குதல் நடத்திய இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் மீது பாலியல் தொல்லை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்ற 7 பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
