தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், புதிய அரசின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து பலத்த விவாதங்கள் எழுந்துள்ளன. கட்சி ஆரம்பித்து ஆயிரம் நாட்களைக் கூட நெருங்காத நிலையில், சுமார் 60 ஆண்டுகால திராவிட அரசியல் பாரம்பரியத்தை முறியடித்து விஜய் சாதனை படைத்துள்ளார். இந்த அரசியல் புரட்சி குறித்து பிரபல ஜோதிடர் ஷெல்வி வெளியிட்டுள்ள கணிப்புகள் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய வலிமைமிக்க ‘பராபவ’ வருட அமைப்பில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும், மக்கள் வேட்பாளர்களின் முகங்களைக் கூட பாராமல் முழுக்க முழுக்க விஜய்க்காக மட்டுமே வாக்களித்து இந்த ஆட்சியை அரியணையில் ஏற்றியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜயின் அவசரப் பதவியேற்பின் பின்னணியில் உள்ள ஜோதிட ரகசியங்களை உடைத்துள்ள ஷெல்வி, ஏப்ரல் 14 முதல் மே 14 வரையிலான சித்திரை மாதத்தில் கடக ராசி லக்னத்தில் 10-ஆம் இடத்தில் சூரியன் உச்சம் பெறும் உன்னதமான கால கட்டத்திலேயே விஜய் பதவியேற்றுள்ளார் என்று கூறியுள்ளார். அஷ்டமி திதி மற்றும் ராகுவின் சதய நட்சத்திர அமைப்பில் இந்த பதவியேற்பு நடந்துள்ளது. அஷ்டமி திதி என்பது பலரும் நினைப்பது போல தீதானது அல்ல, அது பெரிய வெற்றிகளையும் அதிர்ஷ்டங்களையும் தரக்கூடியது. மேலும், குருவின் பூராட நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே ராகுவின் நட்சத்திரத்தில் பதவியேற்க வேண்டும் என்ற ஜோதிட ஆலோசனையின் பேரிலேயே இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செவ்வாயின் ஆதிக்கத்தைக் குறிக்கும் ‘9’ என்ற எண்ணின் அடிப்படையில், முதல்கட்டமாக 9 அமைச்சர்கள் ஜெயலலிதா பாணியில் பதவியேற்றுள்ளனர் என்றும், விஜயின் கையில் உள்ள சிவப்பு கயிறு ராகுவின் பாதுகாப்பைக் குறிப்பது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
புதிய அரசின் நிர்வாகம் மற்றும் விஜயின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய ஷெல்வி, தவெகவினர் ஆட்சியைப் பிடித்துவிட்டோம் என்று மெத்தனமாக இருக்க முடியாது என எச்சரிக்கிறார். தவறு நடந்தால் ஒரு நொடியில் அதிரடி முடிவெடுக்கும் குணம் விஜய்க்கு உண்டு. அவரது ஆட்சியில் ரவுடிசம், கட்டப் பஞ்சாயத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இருக்காது. ஒருவேளை நிர்வாகத்தில் நினைத்தது நடக்கவில்லை எனில், அரசியல் எனக்கு வேண்டாம் என்று அசால்டாக தூக்கிப் போட்டுவிட்டுப் போகும் அமைப்பும் விஜய்க்கு உள்ளது. வரவிருக்கும் காலங்களில் தமிழக அரசியல் என்பது விஜய், உதயநிதி மற்றும் அண்ணாமலை ஆகிய மூன்று முக்கிய முகங்களைச் சுற்றியே சுழலும் என்றும், எத்தனை முனைப் போட்டிகள் வந்தாலும் இவர்களுக்குள் தான் நிஜமான அரசியல் நகரும் என்றும் கணித்துள்ளார்.
தற்போதைய சுக்கிர திசை விஜய்க்கு சாதகமாக இருந்தாலும், 2027 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி வரை முதல்வர் விஜய்க்கு சிறு சிறு தடைகளும், குரு புத்தியால் சில சிக்கல்களும் நீடிக்கும். இந்த அமைப்பானது 2028 இறுதி வரை நீடிக்கும் என்பதால், அவர் தனது உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் கோபத்தைத் தவிர்த்து, உணவுப் பழக்கவழக்கங்களைச் சரியாகப் பராமரித்தால் இந்தத் தடைகளை அவர் எளிதாகக் கடந்துவிடலாம். தற்போதைக்கு விஜயின் ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என்றும், தடைகளைத் தாண்டி அவர் மக்கள் செல்வாக்குடன் புதிய ஆட்சியைத் தொடர்வார் என்றும் ஜோதிடர் ஷெல்வி தனது கணிப்பில் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
