தெலுங்கானா மாநிலம் உத்தர கன்னடா சித்தாபுரா பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் நாயக். பெங்களூருவில் பணியாற்றி வரும் இவருக்கு, சுஜித்ரா என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். குடும்பப் பிரச்சினைகளுக்குப் பரிகாரம் தேடி சுஜித்ரா பிரபல ஜோதிடர் காமல்காரை அணுகியுள்ளார். அப்போது 48 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும் என்று ஜோதிடர் கூறியதை நம்பி, சுஜித்ரா தினந்தோறும் ஜோதிடரின் அலுவலகத்திற்குச் சென்று வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.
மகேஷ் நாயக் ஊரில் இல்லாத நேரங்களில் ஜோதிடர் காமல்கார் அடிக்கடி சுஜித்ராவின் வீட்டிற்கு வந்து தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மகள்கள், தனது தாய் ஜோதிடருடன் நெருக்கமாக இருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். தாயின் தவறான போக்கைக் கண்டு மனமுடைந்த சிறுமிகள், பெங்களூருவில் இருந்த தந்தைக்கு போன் செய்து தங்களை அழைத்துச் செல்லுமாறு அழுதுள்ளனர். இதையடுத்து, மகேஷ் நாயக் தனது மகள்களைத் தனது சகோதரர் வசந்த் நாயக் வீட்டிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
தனது கள்ளக்காதல் விவகாரம் மகள்களுக்குத் தெரிந்ததால் ஆத்திரமடைந்த சுஜித்ரா, ஜோதிடர் காமல்கார் மற்றும் அடியாட்களுடன் சேர்ந்து வசந்த் நாயக் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு தனது மகள்களை மீண்டும் அழைத்து வர முயன்றபோது இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஜோதிடரும் அவரது ஆட்களும் மகேஷ் நாயக் மற்றும் அவரது சகோதரர் வசந்த் நாயக்கை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளனர். மகள்களின் கண் முன்னாலேயே இந்த கோரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி வசந்த் நாயக் உயிரிழந்தார். மகேஷ் நாயக் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக சுஜித்ரா, ஜோதிடர் காமல்கார் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்மீக வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஜோதிடரே கள்ளக்காதல் மோகத்தில் ஒரு உயிரைப் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
