பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் சல்மான் மிர்சா, இலங்கை விடுதி ஒன்றில் பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக வெளியான செய்திகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் போது கண்டியில் உள்ள விடுதி ஒன்றில் அவர் பெண் ஊழியரிடம் தவறாக நடந்ததாகவும், இதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் பரவின. இந்தத் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், இது போன்ற தரம் தாழ்ந்த இதழியலைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), சல்மான் மிர்சா மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறியுள்ளது. சரிபார்க்கப்படாத இத்தகைய தவறான தகவல்களைப் பரப்பிய ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிசிபி எச்சரித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக எந்தவொரு வீரருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை என்பதையும் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
தவறான செய்தியை வெளியிட்ட ஊடக நிறுவனம் மீது அவதூறு வழக்குத் தொடரப்போவதாக சல்மான் மிர்சா தெரிவித்துள்ளார். உலகக்கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறிய நிலையில், அணியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகக் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
