தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்யை சினிமாத்துறையினர் பலர் நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வரும் நிலையில், புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பான விவாதம் தற்போது கோலிவுட்டில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. முதலமைச்சர் விஜய் தனது அமைச்சரவையில் ‘திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் சினிமாடோகிராஃப் சட்டத் துறை’ அமைச்சராக ராஜ்மோகனை நியமித்துள்ளார். இந்த முடிவை நடிகர் விஷால் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். சினிமா துறையைப் பற்றி நன்கு தெரிந்த முதலமைச்சர் விஜய், இந்தத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத ஒருவரை ஏன் அமைச்சராக நியமித்தார் என்று விஷால் தனது சமூக ஊடகப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஷால் தனது பதிவில், “சினிமா துறையில் என்ன நடக்கிறது என்று தெரியாத ஒருவரிடம் எங்களின் கோரிக்கைகளை எப்படி முன்வைக்க முடியும்? கடந்த 30 ஆண்டுகளாகத் திரையுலகில் இருந்த நம் முதல்வருக்கு நம் துறையைப் பற்றி நன்கு தெரியும். நான் ராஜ்மோகனைக் குறைத்து மதிப்பிடவில்லை, இது எனது தனிப்பட்ட கருத்து” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த விமர்சனம், அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ராஜ்மோகனை அவமதிப்பது போல் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் விஷாலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சர்ச்சைக்கு மத்தியில், நடிகர் அருண் விஜய் விஷாலின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் மறைமுகமாக அவருக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அருண் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், “முதலமைச்சரின் முடிவுகளில் தயவுசெய்து குறுக்கிடாதீர்கள். அவர் சினிமா துறையில் இருந்து வந்தவர் என்பதால் நமது பிரச்சினைகள் அவருக்கு நன்றாகவே தெரியும், நிச்சயம் உதவுவார். அவரது முடிவுக்கு அனைவரும் மரியாதை கொடுத்து, என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்; அதற்குள் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவிற்கும் வந்துவிடாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
