கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், தனது சொந்த மாநிலம் மட்டுமன்றி தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த திலீப் குமார் என்பவர், அங்குள்ள 48-வது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் பிரகாஷ் ராஜ் நேரில் ஆஜராகவில்லை. இதன் காரணமாக, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த பிடி வாரண்டை ரத்து செய்யக் கோரி நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று தனது வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது பிரகாஷ் ராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றம் அனுப்பிய சம்மன் நகல் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும், ஊடகங்கள் வழியாகவே இந்த விவகாரத்தை அறிந்து கொண்டதாகவும் விளக்கமளித்தார். மேலும், தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இருந்து பிரகாஷ் ராஜின் பெயர் ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டது என்ற தகவலையும் அவர் நீதிமன்றத்தில் பதிவு செய்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பெங்களூர் நீதிமன்றம், பிரகாஷ் ராஜுக்கு விதிக்கப்பட்டிருந்த பிடி வாரண்டை திரும்பப் பெற்றுக்கொண்டது. அத்துடன், அவருக்கு 4,000 ரூபாய் ரொக்கப் பிணை அடிப்படையில் முன் ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பிடி வாரண்ட் ரத்து செய்யப்பட்டு பிரகாஷ் ராஜுக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ள போதிலும், நான்கு மாநில வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான புகாரின் மீதான நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
