“6 நாட்களாக எங்கே போனார் செந்தில் பாலாஜி?”…. லுக் அவுட் நோட்டீஸ் பின்னணியில் இருக்கும் தமிழக அரசியல் பூகம்பம்…. அர்ஜுன் சம்பத் உடைத்த அதிரடி உண்மை….!

By Nanthini on ஆடி 6, 2026

Spread the love

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் மீதான வழக்குகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் துணிச்சல் இன்றி தலைமறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “நேர்மையானவராக இருந்தால் ஏன் சரணடைய மறுக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சாலை அமைத்ததாகப் போலியான கணக்குகளைக் காட்டி ஊழல் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அர்ஜுன் சம்பத், அவர் உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி வெளிநாடு சென்றிருப்பதைச் சாடினார்.

மதுவிலக்கு கொள்கை மற்றும் முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும் அர்ஜுன் சம்பத் தனது விமர்சனங்களை முன்வைத்தார். விவசாயிகளுக்குப் பயன் தரும் கள்ளுக்கடைக்குத் தடை விதித்துவிட்டு, டாஸ்மாக் கடைகளை மட்டும் அனுமதிப்பது தனியார் நிறுவனங்களுக்கு லாபம் சேர்க்கவே என்று அவர் குறிப்பிட்டார். கொரோனா ஊரடங்கின் போது டாஸ்மாக் மூடப்பட்டிருந்ததை நினைவுபடுத்திய அவர், தமிழகத்தில் பீகார் மாநிலத்தைப் போன்று முழுமையான மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்துப் பேசி வரும் தவெக தலைவர் விஜய், டாஸ்மாக் கடைகளை மூடவும் துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

   

மறுபுறம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குதிரை பேர விவகாரம் தொடர்பாகத் தவெக எம்.எல்.ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிக்கப் பணம் பேரம் பேசியதாக அவர் தெரிவித்துள்ள புகாரில், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகத் திருவல்லிக்கேணி காவல்துறையினர் சம்மன் அனுப்பியும், இருவரும் ஆஜராகாததுடன் தலைமறைவாக இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது; இதையொட்டி காவல்துறை அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறது.