கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள வெள்ளிமலைப்பட்டினத்தில் 40 ஆண்டு கால நட்பை கொச்சைப்படுத்தும் வகையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மனைவியை இழந்து தனியாக வசித்து வந்த பாக்குமட்டை வியாபாரியும், திமுக பிரமுகருமான நாகராஜ் (62) என்பவருக்கும், அவரது நெருங்கிய நண்பரான கந்தசாமியின் (65) மனைவி பாக்கியா என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பலமுறை கந்தசாமி கண்டித்தும் நாகராஜ் பொருட்படுத்தாததால், இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை நாகராஜ் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, நரசீபுரம் தெற்கு ரத வீதியில் மறைந்திருந்த கந்தசாமி அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனக்குச் சாதகமாக நாகராஜ் பேசாததால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கந்தசாமி, தான் கையோடு கொண்டு வந்த மிளகாய்ப் பொடியை நாகராஜின் முகத்தில் வீசியுள்ளார். கண் எரிச்சலால் நாகராஜ் அலறிய நிலையில், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரது தலை, கழுத்து மற்றும் வயிறு ஆகிய இடங்களில் 13-க்கும் மேற்பட்ட முறை சரமாரியாக வெட்டியதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த ஆலந்துறை காவல் துறையினர் நாகராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தப்பியோடிய கொலையாளி கந்தசாமியை போலீசார் வலைவீசித் தேடிய நிலையில், அவர் பதுங்கியிருந்த பகுதியைச் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரிடம் சிக்காமல் இருக்கக் கந்தசாமி கத்தியால் தனது வலது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட போலீசார் உடனடியாகக் கைது செய்து கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகக் கோவை மாவட்டத்தில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து 10 படுகொலைகள் நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. இதனால் காவல்துறையினர் ரோந்து பணியைத் தீவிரப்படுத்தி சட்டம்-ஒழுங்கை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
