ஓட்டுக்கு 500 வாங்கும் வாக்காளரா நீங்கள்? அப்போ இந்த ‘ரேட் கார்டை’ கண்டிப்பா பாருங்க… நாம் தமிழர் கட்சியின் அதிரடி விலைப் பட்டியல்… அதிர்ச்சியில் மக்கள்…!!!

By Muthu Mani on சித்திரை 7, 2026

Spread the love

தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ஓட்டுகளைப் பெறுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் ஒருபுறம் தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம், மக்களிடையே நேர்மையாக வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவம் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு தரப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியும் “ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்” என்ற முழக்கத்துடன் மக்கள் மத்தியில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் தன்மானத்தைப் பணத்திற்காக விட்டுக் கொடுக்காமல், நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருவாடானை தொகுதிக்குட்பட்ட புதுப்பட்டிணம் கிராமத்தில் அக்கட்சியினரால் வைக்கப்பட்ட ஒரு விழிப்புணர்வு பேனர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

   

அந்தப் பேனரில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் மிகவும் வித்தியாசமான முறையிலும், சிந்திக்க வைக்கும் வகையிலும் அமைந்துள்ளன. அதில் சந்தையில் விற்கப்படும் கால்நடைகளின் விலையை மக்களின் ஓட்டுக்கு வழங்கப்படும் பணத்துடன் ஒப்பிட்டுள்ளனர். எருமை மாடு ரூ. 55,000, பசு மாடு ரூ. 45,000, ஆடு ரூ. 10,000 எனப் பட்டியலிட்டுள்ளதோடு, ஒரு நாயின் விலை கூட ரூ. 5,000 முதல் ரூ. 25,000 வரை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஒரு வாக்காளரின் விலை வெறும் ரூ. 500 முதல் ரூ. 2,000 வரை மட்டுமே நிர்ணயிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

   

குறிப்பாக, ஒரு பன்றியின் விலை கூட ரூ. 5,000 முதல் ரூ. 15,000 வரை இருக்கும் நிலையில், மக்களின் விலை ஒரு பன்றியின் விலையை விடவும் குறைவாக இருப்பதாக அந்தப் பேனரில் சாடப்பட்டுள்ளது. “பன்றியின் விலையை விடவும் உங்கள் விலை குறைவா? சிந்தித்துப் பாருங்கள், பணம் பெறாமல் தன்மானத்துடன் வாக்களியுங்கள்” என்ற அந்த வாசகங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த நூதனமான விழிப்புணர்வு முயற்சி பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, தேர்தல் நேரத்தில் பண நாயகத்திற்கு எதிராக ஒரு விழிப்புணர்வை உண்டாக்கியுள்ளது.