தமிழகம் முழுவதும் இன்று முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் உட்பட அரசின் பல்வேறு சேவைகளையும் மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழக முழுவதும் ஜூலை 15 இன்று தொடங்கி வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி வரை இந்த முகாம்கள் நடைபெற உள்ளது. ஊரகப்பகுதிகளில் இந்த முகாம்கள் மூலமாக 46 சேவைகளும், நகர்ப்புற பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளது. மொத்தம் நான்கு கட்டங்களாக பத்தாயிரம் முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மக்கள் அரசு சேவைகளைப் பெற அரசு அலுவலகங்களுக்குச் சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அனைத்து துறை அதிகாரிகளுமே இந்த முகாம்களில் இருப்பார்கள் என்பதால் பெரும்பாலான சேவைகளை மக்கள் இதில் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்ட பெண்களும் இந்த திட்டம் மூலம் விண்ணப்பிக்கலாம். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களோடு மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது. மேலும் இந்த முகாம்களில் அளிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் எனவும் அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழக மக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
