‘பிரேமம்’, ‘டிராகன்’, ‘பைசன்’ போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்த பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது கடந்த காலக் காதல் தோல்வி மற்றும் மன உளைச்சல்கள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ‘பைசன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா இடையே காதல் மலர்ந்ததாகவும், பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாகப் பிரிந்துவிட்டதாகவும் கோலிவுட்டில் செய்திகள் பரவின. இந்நிலையில் தனது கடந்த கால உறவு குறித்துப் பேசிய அனுபமா, “என்னுடைய பழைய உறவில் 2 ஆண்டுகள் மனரீதியாகப் பல கொடுமைகளுக்கு ஆளானேன். அந்த நபர் என்னை முழுமையாகக் கட்டுப்படுத்த நினைத்தார். திடீரென பிரேக் அப் என்பார், பின்னர் வந்து மன்னிப்பு கேட்பார். இறுதியில் இருவீட்டுப் பெற்றோரும் பேசியபோதே அவரது உண்மையான முகத்திரை கிழிந்தது” எனத் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்தச் சர்ச்சை குறித்து மீண்டும் பேசியுள்ள அனுபமா, “நான் ஒரு கடினமான காலத்தைக் கடந்து வந்துவிட்டேன். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். தற்போது எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. என் வாழ்க்கையில் நடந்ததைப் பகிர்ந்ததன் மூலம் உண்மையான அன்பு காட்டுபவர்களைத் தெரிந்துகொண்டேன். அவர்களுக்காகத் தொடர்ந்து என் கலைப்பயணத்தை மேற்கொள்வேன்” எனக் கூறியுள்ளார். அவரது இந்த உருக்கமான பேச்சு தற்போது இணையத்தின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
