டிவிகே ஆட்சியை கவிழ்க்க சதியா…? ரூ35 கோடி லஞ்ச வழக்கில்… செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்… நீதிமன்றத்தில் வெடித்த பரபரப்பு வாதங்கள்…!!

By Swetha on ஆடி 8, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. என். இளையராஜாவிற்கு ரூ 35 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆர்.வி. அசோக் குமார் ஆகிய இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் நிபந்தனையுடன்கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். முதல் தகவல் அறிக்கையில் செந்தில்பாலாஜியின் நேரடித் தொடர்பு குறித்துப் போதிய ஆரம்பகட்ட ஆதாரங்கள் இல்லாததைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர். இளங்கோ மற்றும் பி. குமரேசன் ஆகியோர், காவல் துறையின் குற்றச்சாட்டுகளைத் தவிடுபொடியாக்கும் வாதங்களை முன்வைத்தனர். புகார் அளிப்பதில் இரண்டு நாட்கள் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், லஞ்சம் கொடுக்க முயன்றதற்கான ஆடியோ பதிவு அரசிடமோ அல்லது புகார்தாரரிடமோ இல்லை, வெறும் அழைப்பு விவரங்கள் மட்டுமே உள்ளதாகவும் குறிப்பிட்டனர். மேலும், கரூர் இடைத்தேர்தல் பணிகளைத் தடுக்க அரசியல் பழிவாங்கலாகவே இந்த வழக்கில் செந்தில்பாலாஜி சேர்க்கப்பட்டுள்ளார் என்றும், வெறும் 59 எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ள திமுக, ஒரு எம்.எல்.ஏ-வுக்கு ரூ35 கோடி கொடுத்து ஆட்சியை கவிழ்க்க முயன்றது தர்க்கரீதியாகச் சாத்தியமற்றது என்றும் வாதாடினர்.

   

மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யான் கடுமையாக எதிர்த்தார். சென்னையில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் தங்கி, தற்போதைய டிவிேக அரசை முற்றிலும் கலைப்பதற்காக தீட்டப்பட்ட மிகப்பெரிய சதித்திட்டம் இது என்றும், சுமார் 10 தவெக எம்.எல்.ஏ-க்களை குதிரை பேரம் பேச தலா ரூ35 கோடியும், இடைத்தரகருக்கு ரூ 5 கோடியும் பேசப்பட்டு ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார். மேலும், முக்கிய குற்றவாளி சிங்கப்பூருக்குத் தப்பியோடியுள்ள நிலையில், பெங்களூரு வரை நீளும் இந்த வழக்கின் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.