Connect with us

CINEMA

நெகட்டிவ் கதை அம்சங்கள் கொண்ட ‘என் ராசாவின் மனசிலே’.. அப்போதே ஜெயித்து காட்டிய தனுஷின் அப்பா..

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகர்கள் ஒழுக்க சீலர்களாக மட்டுமே இருப்பார்கள்.  சிவாஜி கணேசன் தைரியமாக சில படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனும் அது போல சிவப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட சில முயற்சிகளை மேற்கொண்டார். ரஜினியின்  தொடக்கக் கால படங்கள் பலவற்றில் அவர் ஆண்ட்டி ஹீரோவாக நடித்துள்ளார்.

அந்த வகையில் 1991 ஆம் ஆண்டு வெளியாகி கவனம் வெள்ளி விழா கண்ட படம்தான் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’. உதவி இயக்குனராக இருந்த போது 12 ஆண்டுகளுக்கு முன்னர் தான்  எழுதிய ஒரு கதையை அவர் அப்போது தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இருந்த ராஜ்கிரணிடம் கூறியுள்ளார். அந்த கதை ராஜ்கிரணுக்கு பிடித்துவிடவும், அதில் இருந்த மாயாண்டி என்ற முரடனின் கதாபாத்திரம் தனக்கு பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து தானே நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.

   

தன் மாமன் மகள் மீது ஆசை வைத்திருக்கும் மாயாண்டி கிராமத்தைக் காவல் காக்கும் முரடன். அவன் மேல் பயத்தில் இருக்கும் சோலையம்மாவை அவள் விருப்பத்தை கேட்காமலேயே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். மாயாண்டிக்கோ தன் காதலை வெளிப்படுத்த தெரியவில்லை. மாயாண்டியைப் பார்த்து அஞ்சி நடுங்கும் சோலையம்மாவை ஒரு போதையில் வன்புணர்ச்சி செய்துவிடுகிறான் மாயாண்டி.

இதன் பின்னர் நடக்கும் சம்பவங்களால் சோலையம்மாவுக்கு மாயாண்டியின் காதல் புரிய வரும் போது எதிர்பாராத விதமாக பிரசவத்தின் போது உயிரிழக்கிறாள். இந்த சம்பவம் மாயாண்டியை நிலைகுலைய செய்கிறது. இதற்கிடையில் சோலையம்மாவின் தங்கையை தனக்கு இரண்டாம் தாரமாக மாயாண்டி கேட்க, அவளோ ஊர் பண்னையார் மகனைக் காதலிக்கிறாள். அந்த காதலை புரிந்துகொள்ளும் மாயாண்டி, பண்ணையாரை எதிர்த்து அவர்கள் காதலை சேர்த்து வைத்து உயிர்விடுகிறான். பண்ணையாரின் குழந்தை சோலையம்மாளின் தங்கையிடம் வளர்கிறது.

நெகட்டிவ் அம்சங்கள் கொண்ட இந்த கதையை முதலில் முழுக்க ஒரு வில்லன் போலவே உருவாக்கியுள்ளார் கஸ்தூரி ராஜா. ஆனால் ராஜ்கிரண் உள்ளிட்டவர்கள் அறிவுறுத்தியதின் பேரில் அந்த கதாபாத்திரம் மனம் மாறி காதலை சேர்த்து உயிர்விடுவது போல மாற்றியுள்ளனர். அது படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணியாக அமைந்தது. அதே போல இளையராஜாவின் அற்புதமான பாடல்களும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களாக அமைந்தன. 175 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கண்ட இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இப்போது ராஜ்கிரண் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in CINEMA

To Top