சீனாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் மல்லாக்க விழுந்து மீண்டும் எழுந்திருக்க முடியாமல் தவித்த ஆமைக்கு, மற்றொரு ஆமை போராடி உதவி செய்து காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சீனாவின் நான்ஜிங் நகரில் அமைந்துள்ள ஹாங்ஷான் வன மிருகக்காட்சி சாலையில் நூற்றுக்கணக்கான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள ஆமைகளில் ஒன்று எதிர்பாராதவிதமாகத் தரையில் மல்லாக்க விழுந்து, மீண்டும் நிமிர்ந்து நிற்க முடியாமல் நீண்ட நேரமாகப் போராடிக் கொண்டிருந்தது. இதைக் கவனித்த மற்றொரு ஆமை, மெதுவாக அதன் அருகில் சென்று தனது தலையால் முட்டியும் தள்ளியும் அதனைத் திருப்பி நிறுத்த முயன்றது.
நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த ஆமை தனது தொடர் முயற்சியால் சக ஆமையை மீண்டும் பழைய நிலைக்குத் திருப்பி நிற்க வைத்தது. இந்தக் காட்சியைக் கண்டு அங்கிருந்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆபத்தான நேரத்தில் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பரஸ்பர உதவியும் அன்பும் உண்டு என்பதை உணர்த்தும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் லட்சக்கணக்கான லைக்குகளைக் குவித்து வைரலாகி வருகிறது.
