இந்திய ராணுவத்தில் 2027-ஆம் ஆண்டிற்கான பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்க்கும் முகாம் குறித்த அறிவிப்பை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இதில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மாவட்டங்களைச் சேர்ந்த 8 மற்றும் 10-ஆம் வகுப்பு பயின்ற இளைஞர்கள் கலந்துகொள்ளலாம். பொதுப்பணி, தொழில்நுட்பம், எழுத்தர் மற்றும் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்க விரும்புவோர் 17 ½ முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதுடன், ஏப்ரல் 1, 2026-க்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் நுழைவுத் தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும் என்பதால், இடைத்தரகர்களை நம்பாமல் ஆர்வமுள்ள இளைஞர்கள் இப்போதிலிருந்தே பயிற்சியைத் தொடங்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இது நாட்டின் எல்லையைக் காக்கும் உன்னதப் பணி என்பதால், தகுதியுள்ள தமிழக இளைஞர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
