தமிழக பாஜகவில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ‘அன்புக் கூட்டம்’ என்ற பெயரில் ரகசியமாகச் செயல்பட்டு வருவது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலைக்கு எதிராகச் செயல்படும் மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியின் அதிருப்தியாளர்களைக் குறிவைத்து சமூக வலைதளங்களில் இவர்கள் தீவிரமாக இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறிப்பாக, கட்சி மேலிடத்திற்குத் தெரியாமல் ஒரு தனிப்பட்ட படையைப் போல இந்த அமைப்பு செயல்படுவதும், அண்ணாமலையின் பிம்பத்தை உயர்த்துவதற்காக மற்ற தலைவர்களை விமர்சிப்பதும் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
இந்த விவகாரம் தற்போது டெல்லி மேலிடம் வரை சென்றுள்ளதால், தமிழக பாஜகவில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளதாகத் தெரிகிறது. ‘அன்புக் கூட்டம்’ என்ற பெயரில் செயல்படுபவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன என்பது குறித்து உளவுத்துறை மற்றும் கட்சித் தலைமை ரகசியமாக விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அண்ணாமலை லண்டன் பயணத்தில் இருக்கும் வேளையில், அவரது ஆதரவாளர்கள் மீது எழுந்துள்ள இந்தப் புகார், தமிழக பாஜகவின் எதிர்கால அரசியல் நகர்வுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
