தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி தனி அமைப்பைத் தொடங்கியதைத் தொடர்ந்து, அதில் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் தற்போது மீண்டும் பாஜகவிற்கே திரும்ப திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்த அவர், இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு குறிப்பிட்ட ஆதரவு தளத்தை உருவாக்கிய போதிலும், அதிமுகவுடனான கூட்டணி விமர்சனங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனது பதவியை இழந்தார். பின்னர் பாஜகவில் சாதாரண உறுப்பினராக நீடித்த நிலையில், தனி அமைப்பைத் தொடங்கிச் செயல்பட ஆரம்பித்தார். இருப்பினும், ஆரம்பக்கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மாறாக உறுப்பினர்கள் சேர்க்கை மெதுவாக நடைபெறுவது மற்றும் புதிய கட்சி தொடங்குவதில் தொடர்ந்து ஏற்படும் தாமதங்கள் காரணமாக, அவருடன் சென்ற ஆதரவாளர்களிடையே தயக்கமும் சலசலப்பும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி, விலகிச் சென்ற நிர்வாகிகளை மீண்டும் தாய் கழகத்திற்கே கொண்டு வரும் முயற்சிகளில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான பல முக்கிய நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், மீண்டும் கட்சிக்குத் திரும்பும் தலைவர்களுக்கு அவர்கள் ஏற்கனவே வகித்த அதே பொறுப்புகளும் உரிய முக்கியத்துவமும் வழங்கப்படும் என பாஜக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இந்த நகர்வுகள் தமிழக பாஜக முகாமில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது அமைப்பை வலுப்படுத்தப் போராடி வரும் அண்ணாமலைக்கு இது ஒரு பின்னடைவாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.
