செய்தியாளர் சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசிய திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மற்றும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் குறித்து முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். தேர்தலுக்கு முன்பாக விஜய் மீது சில ஐயங்கள் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய் எடுத்து வரும் அரசியல் முடிவுகள் வரவேற்கத்தக்கவையாக உள்ளன என்றார். மேலும், தமிழக மக்களின் உரிமைகளைத் தொடர்ந்து பிரதிபலிக்கும் பட்சத்தில் அண்ணாமலையையும் தங்களை ஆதரிக்க வரவேற்போம் என அவர் வெளிப்படையாகக் கூறினார்.
அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் சமன்பாடுகள் முற்றிலும் மாறியுள்ளன. தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் விசிக அங்கம் வகித்து வரும் நிலையில், காங்கிரஸுடனான விரிசல் காரணமாகத் திமுக இந்த ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது. திமுகவின் இந்த விலகலுக்கு மத்தியிலும், தேசிய அரசியலைக் கருத்தில் கொண்டு விசிக இக்கூட்டத்தில் பங்கேற்கத் துணிந்திருப்பது, தமிழகப் புதிய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான புதிய அரசியல் நகர்வுகளின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது.
