தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் பாஜக சார்பாக தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதனைப் போலவே பல்வேறு மாவட்டங்களிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை நயினார் நாகேந்திரன் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றார். அதேசமயம் ஒவ்வொரு மாதமும் தமிழக பாஜக தலைப்பில் மாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகின்றது.
அதிமுகவிடம் இந்த முறை 40 தொகுதிகள் வரை கேட்பதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது. இப்படியான நிலையில் தமிழக பாஜக தரப்பில் வேட்பாளர்களை தயார் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தரப்பில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். யார் யாருக்கு தேர்தலில் போட்டியிட விருப்பம் என்பதை உறுதி செய்துவிட்டு பட்டியலை தயார் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று நயினார் நாகேந்திரனிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அண்ணாமலை நேரடியாக தேசிய பொறுப்புக்கு கொண்டு செல்லப்படுவார் என தெரிகிறது. 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் என இரண்டு முறை இதுவரை அண்ணாமலை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அந்த இரண்டு தேர்தல்களிலும் அண்ணாமலை தோல்வி அடைந்தார். இப்படியான நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
