“எல்லாத்துக்கும் காரணம் அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்”… பாஜகவை அதிரவைத்த 5 பக்க ரகசிய கடிதம்…. அண்ணாமலை உடைத்த ‘அந்த’ 4 சீனியர்கள் யார்…?

By Nanthini on ஆனி 2, 2026

Spread the love

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான கே.அண்ணாமலையின் அரசியல் பயணம், கடந்த சில வாரங்களாகப் பல்வேறு விவாதங்களையும் யூகங்களையும் கிளப்பியுள்ள நிலையில், தற்போது அது ஒரு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. பாஜகவில் தனக்கு உரிய அங்கீகாரமும், பொறுப்பும் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் அவர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்துத் தமிழகத்தைச் சேர்ந்த ‘4 சீனியர்கள்’ தன்னை ஓரம் கட்டிவிட்டதாகத் தனது ஆதரவாளர்களிடம் அண்ணாமலை குமுறியுள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2020-ல் பாஜகவில் இணைந்தார். சேர்ந்த சில மாதங்களிலேயே மாநிலத் துணைத் தலைவராகவும், பின்னர் 2021-ல் மாநிலத் தலைவராகவும் அண்ணாமலை அதிவேக வளர்ச்சி கண்டார்.

   

அண்ணாமலையின் தலைமையில் “என் மண் என் மக்கள்” நடைபயணம் மற்றும் திமுக அரசுக்கு எதிரான தொடர் விமர்சனங்கள் காரணமாக அவர் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தைப் பெற்றது அவரது அரசியல் திறமைக்குச் சான்றாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் நடந்த அரசியல் மாற்றங்கள் அவரது பயணத்தைத் தலைகீழாக மாற்றின. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவானபோது, கூட்டணியைச் சுமுகமாக வழிநடத்த வேண்டும் என்பதற்காக அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு கட்சி நடவடிக்கைகளிலிருந்தும், தேர்தலிலிருந்தும் அண்ணாமலை ஒதுங்கியே இருந்தார்.

   

தேர்தல் முடிந்த பிறகும் அண்ணாமலைக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியோ, மத்திய அமைச்சர் பதவியோ அல்லது தேசிய அளவிலான பொறுப்புகளோ வழங்கப்படாதது அவரது ஆதரவாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில்தான், சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும் விவகாரத்தில், மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு மாறாக அண்ணாமலை வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தது கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டை அம்பலப்படுத்தியது. இதற்கிடையே, டெல்லி சென்று தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்த அண்ணாமலை, தமிழக பாஜகவில் தன்னைத் திட்டமிட்டுப் புறக்கணித்தது குறித்தும், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்தும் 5 பக்கக் கடிதம் ஒன்றை அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தற்போது அண்ணாமலை தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதோடு, சமூக சேவை மற்றும் இளைஞர் இயக்கங்களை மையமாக வைத்துப் புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் விஜய் தலைமையிலான அரசியல் எழுச்சி தமிழக இளைஞர்களைக் கவர்ந்துள்ள நிலையில், அதே இளைஞர் வாக்கு வங்கியை இலக்காகக் கொண்டு அண்ணாமலையும் தனிக்கட்சி தொடங்கினால் தமிழக அரசியலில் போட்டி மேலும் தீவிரமாகும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எனினும், அவரைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியாக மீண்டும் மாநிலத் தலைவர் பதவியோ அல்லது தேசிய அளவிலான முக்கிய பொறுப்போ வழங்க பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாகவும் சொல்லப்படுவதால், அண்ணாமலையின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் உச்சத்தை எட்டியுள்ளது.