“ஒரே இரவில் மாறிய தமிழக அரசியல் களம்”… வெறும் 10 மணி நேரத்தில் 10 லட்சம் ‘தலைவர்கள்’… அண்ணாமலை நெகிழ்ச்சியோடு பகிர்ந்த அந்த எக்ஸ் (X) பதிவு..!

By Nanthini on ஆனி 6, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, ‘வி த லீடர்ஸ்’ (We The Leaders) என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தனது புதிய இயக்கம் தமிழகத்தில் நடைபெறவுள்ள அடுத்த பொதுத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடும் என்றும், இது ஒரு புதிய அரசியல் பயணத்தின் தொடக்கம் என்றும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

புதிய இயக்கம் தொடங்கப்பட்ட கையோடு, அதில் மக்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்வதற்காக www.wetheleaders.org என்ற புதிய இணையதள முகவரியையும் அண்ணாமலை வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இந்த இணையதளத்தில் ஆர்வமுடன் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்யத் தொடங்கினர். இதன் காரணமாக, இணையதளம் தொடங்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்திலேயே உறுப்பினர் சேர்க்கை ஒரு லட்சத்தைத் தாண்டி சாதனை படைத்தது.

   

மக்களின் இந்த ஏகோபித்த வரவேற்பால், நேற்று இரவிலேயே உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்து அசுர வேகத்தில் உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி, இந்த இயக்கத்தில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 11.46 லட்சத்தைத் தாண்டியுள்ளது. வெறும் 10 மணி நேரத்திற்குள் இத்தனை லட்சம் மக்கள் ஒரு புதிய இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

   

இந்த அசுர வளர்ச்சி குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் உற்சாகத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து நமது அரசியல் இயக்கம் சாதனை படைத்துள்ளது; இந்த மகத்தான வரவேற்பு, சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டதோடு, தன் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொருவருக்கும் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.